Labels

Monday, 24 May 2021

லக்னம்/ராசி ஒரு புரிதல்...

 
🔯சோதிடம் அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று லக்னம் மற்றும் ராசி இதனை பற்றி பலருக்கு தெரிந்தாலும் இதனை இன்னும் தெளிவாக விளக்கவே இந்த பதிவு, தெரிந்தவர் கடந்துவிடவும்...

⚜️லக்னம் ஜனனத்தின் போது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று, இதுவே ஜாதகத்தின் உயிர்,

 இதனை கணித்தே அனைத்து பலன்களையும் காணவேண்டும், லக்னம் ஒரு ஜாதகரின் ஆத்ம நிலையை குறிப்பதாகும், லக்னம் வலு பெற்றால் ஜாதகரால் எதையும் கடந்து நிலைத்திருக்கும் வல்லமையை பெற இயலும்...

⚜️ராசி ஜனனத்தில் ஆண்டவன் லக்கினத்தை தீர்மானித்தது போன்றே அந்த லக்னம் எனும் ஆத்மா வாசம் செய்ய உடலையும் அவரே தீர்மானிக்கிறார் அந்த உடலே ராசியாகும், ராசி ஆத்மாவுக்கான அடையாளம் என்று கூறுவது பொருத்தமாகும்,

 ராசியால் தான் மனிதன் உலகியல் வாழ்க்கையில் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறான், அனைத்தையும் அனுபவிக்கிறான் என்றால் மிகையாகாது...

பொதுவாக நவகிரகங்கள் அதன் தன்மைக்கு ஏற்ப இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது நம் முன்னோர்களால், அவை

⚜️அருள் அணி, பொருள் அணி,

 பெயரிலேயே அதன் தன்மையை கூறியது தான் நம் முன்னோர்களின் சிறப்பு...

⚜️அருள் அணி : குரு, சூரியன், சந்திரன், செவ்வாய்..

⚜️பொருள் அணி : சுக்கிரன், சனி, புதன்...

⚜️ராகு, கேது இருவரும் நிழல்கள் மேலும் இவர்கள் இருவரும் கர்மபலனை வழங்குபவர்கள், முழு அசுபர் இவர்களின் காரகங்கள் அனைத்து கிரகங்களிலும் பரவியுள்ளது என்றால் மிகையாகாது,

 சில காரகங்கள் அருள், பொருள் அணியை போல் இருந்தாலும் நின்ற வீட்டின் பலனை தருபவர்கள் என்பதால் இவர்களை நான் எந்த அணியிலும் சேர்க்கவில்லை,

சில நூல்களில் ராகு பொருள் அணி என்றும், கேது அருள் அணி என்றும் கூறியுள்ளார்,

 அதை நான் இங்கே குறிப்பிடவில்லை என்பதை கவனிக்கவும்...

இந்த இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள மாட்டார்கள்,

 இன்னும் சரியாக கூற வேண்டும் என்றால், பகைவர்கள் எனலாம்,

 குரு+சுக்கிரன்=பகை,

 சூரியன்+சனி=பகை,

 இவ்வாறே பகை கிரகங்கள் ஆகும், ஆனால் இதிலும் தலைவர்கள் இருவர் மட்டுமே பகைவர்கள் தலைவருக்கு கீழ் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு பேணுவார்கள்,

 உதாரணமாக சூரியனுக்கு புதன்= நட்பே சூரியனால் புதன் அரை பாபி ஆகிவிடுவார்,

 சந்திரனோ யாரையும் பகைப்பதில்லை ஏனெனில் மனோகாரகன் மற்றும் மாத்துருகாரகன் அல்லவா தாயின் அன்பு அவ்வாறு, இப்படி சில நுணுக்கங்கள் உள்ளன...

12 ராசியை எடுத்தோமானால் அருள் அணி வீட்டிற்கு அடுத்த வீடு பொருள் அணி வீடாக வருவதை காணலாம் இதே போல் தான் பொருள் அணிக்கும்,

 உதாரணமாக மேஷம் அருள் அணி, ரிஷபம் பொருள் அணி அதே போல் மிதுனம் பொருள் அணி, கடகம் அருள் அணி, இதன் வழியே தெரியவருவது என்னவென்றால் மனிதன் அருள் பொருள் இரண்டையும் சார்ந்தே வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்பதே, இவ்வாறு இருக்கும் போது அருள் அணி கிரகம் பொருள் அணிக்கு உதவாது என்பதையும் நாம் கணிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டும்,

அருள் அணி ஆத்மா சார்ந்த வாழ்க்கை, பொருள் அணி உடல் சார்ந்த வாழ்க்கை,

 உங்கள் லக்னம் எந்த அணி சார்ந்ததோ அதையே ஆத்மா தேடும், அதாவது கன்னி லக்னம் என்றால் ஆத்மா பொருள் காரகங்களை விரும்பும், அதே போல் தான் அருள் அணி ராசி என்றால் உடல் அங்கபிரதக்க்ஷணம், தானம் தர்மம், சேவை செய்ய ஆவலாக இருக்கும்,

இதில் இருக்கும் சிக்கல் லக்னம் பொருளாகி, ராசி அருளானால் ஜாதகர் தனக்கென எதையும் சேர்த்து வைக்கமாட்டார்,

அதே லக்னம் அருள் என்றாகி, ராசி பொருளானால் ஜாதகர் பிறரிடம் இருப்பதையும் அபகரிக்கும் ஆவல் கொள்வார்,

ஆனாலும் ஆத்ம சாந்தி கிடைக்காது அதாவது திருப்தி ஏற்படாது...

பொதுவாக ஒரே லக்னம் மற்றும் ராசி என்றால் ஜாதகரால் தன் வாழ்க்கையை நகர்த்துவது கடினமாக இருக்கும்,
 சமநிலை பெறாது

 அருள் அணி லக்னம், ராசி என்றானால் ஜாதகரால் பொருள் சேர்க்க இயலாது

 அருளை தேடியே செல்வார், ஓரு பழமொழி உண்டு: பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை,

அதை போல் வெறும் அருளை சேர்த்த ஜாதகரால் இந்த மாய உலகில் வாழ்வது கடினமாகும்,

ஆகவே எப்போதும் லக்னம் ஒரு அணியாகவும், ராசி ஒரு அணியாகவும் இருப்பது சமநிலை தத்துவத்தின் படி நன்மையாகும்,


 இதிலும் லக்னம் வலு பெற்றதா, ராசி வலுபெற்றதா என்பதை கணித்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்...

என்னதான் கோச்சாரம் கிரகநிலைகளை அவ்வளவு கணக்கில் கொள்ள கூடாது என்று கூறினாலும், கோச்சார பலன் 40% நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

ஆகவே இவ்வாறு லக்னம், ராசி வெவ்வேறு அணியாக இருந்தால் ஜாதகரால் எதிர்கொள்வது சுலபமாக இருக்கும்,

 ஒரே அணியானால் கோச்சாரத்தினால் சிக்கல் எழும் உதாரணமாக தற்போதைய பெயர்ச்சி தனுசு, மீனம் லக்னம், ராசியாக கொண்டவருக்கு கடினமாக இருக்கும்,

 இதுவே இருவரில் ஒருவர் பொருள் அணியானால் சனி, ராகு, கேது அனைவரும் வலுப்பெற்று உள்ளதால் சமநிலையில் சமாளிக்க இயலும், இவைகளை நாம் தீர்மானிப்பதில்லை என்றாலும், சோதிடத்தில் எவ்வாறு இருந்தால் நலம் என்பதை விளக்கவே இந்த பதிவு.

No comments:

Post a Comment