ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி.
சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது.
நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது.
முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள்.
இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.
வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும்.
அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது.
எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.
சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும்.
பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது.
எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது.
ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?
பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.
எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும்.
நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.
செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.
இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான்.
தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.
Monday, 24 May 2021
கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment