Labels

Monday, 24 May 2021

பாதம் வடிவில் இருக்கும் தும்பைப்பூ


தும்பை என்பவள் ஒரு தேவலோக கன்னி. இவள் விதிவசப் பயனால் சபிக்கப்பட்டு பூலோகம் வந்தவள். தாசி குலத்தில் பிறந்து சிவனடியார்களுக்கே தனது உடலை அர்ப்பணம் செய்து பணிவிடைகள் செய்வது என உறுதி பூண்டாள்.

அதன்படியே செய்துவரும் போது சிவபெருமானே சோதனை செய்ய எண்ணியவர், சிவனடியார் வேடம் பூண்டு தும்பை இல்லம் வந்து தங்கினார். இவர் சரசலீலைகள் செய்யாமல் நோய் வாய்பட்டவர் போல் நடித்து வாந்தி பேதி இப்படியாக ஒரே ரகளை. தும்பை இதை வெறுக்கவில்லை ஏனெனில் இவர் சிவனடியார் ஆயிற்றே. தும்பைக்கு இரவெல்லாம் மல ஜலத்தை சுத்தம் செய்வதே பணியாகியது. பொழுது புலரும் தருணம் சிவனடியாருக்கு ஆவிபிரிந்து விட்டது (மரணம் அடைந்தது போல் சிவபெருமான் நாடகம் அரங்கேற்றினார்)

என்ன செய்வாள் பாவம் இறுதி கடன் முடிக்க ஊராரைக்கூட்டி மயானத்திற்கு கொண்டுபோய் சவ அடக்கம் செய்வதற்கு முன் இரவு சிவனடியார் கொடுத்த பணத்தை காட்டி "ஐயோ அன்போடு வந்த இவருடைய இச்சையை பூர்த்தி செய்யாத பாவியானேன்" என்று கதறி அழுதாளாம். தும்பையின் பக்தியை மெச்சிய சிவபெருமான் காட்சிதருகிறார்.
    
சிவபெருமான் காட்சி தந்தபோது பலவிதமாக புளங்காகிதம் அடைந்து கண்ணீர் பெருக அழுகிறாள். இந்த பாவிக்கும் நீ கருணை புரிந்தாயா என்று. சிவபெருமானும் தும்பையின் பக்தியில் உருகி "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தும்பை என்கிறார்"  சிவபெருமான் இவ்வாறு கேட்டவுடன் மகிழ்ச்சியில் திகைத்துப்போன தும்பை "எனது பாதம் உமது சிரசில் என்றும் இருக்க வேண்டும்" என்று வாய் குழறி கேட்டு விட்டாள். அவள் மனதில் உங்கள் பாதம் என்றும் எனது சிரசில் இருக்க வேண்டும் என நினைத்தவள் தான் வாய் தவறி கேட்டதை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டாள். அடியவர்களுக்கு என்றும் எதையும் மறுக்காத சிவபெருமான் மன்னிப்பு கேட்ட தும்பையை பார்த்து "பெண்ணே நீ கேட்ட வரம் தான் சரியானது எனது அடியவர்க்கெல்லாம் தொண்டு செய்த உமது பெருமையே பெருமை" என கூறி அவளை தும்பை செடியாக்கி அதன்  பாதம் போன்ற வடிவம் உள்ள மலரை என்றும் தனது சிரசில் வைத்து கொண்டாராம்.  

பிரதி வருஷமும் காஞ்சிபுரம் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடக்கும் போது இந்த தும்பை மலரை ஏராளமாக காணலாம். கூடை கூடையாக வெளீர் என்ற வெண்மை நிறத்தில் இம்மலர்கள் ஏகாம்பர நாதரின் மேலே காணும் போது  நமக்கு தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வையே உண்டாக்கும்.

No comments:

Post a Comment