Labels

Monday, 24 May 2021

சுவாதி

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பதிவு
’சிப்பிக்குள் முத்து’  மாதிரி சுவாதி நட்சத்திரம்! துரோகம் செய்யும் நண்பர்கள்.

சுவாதி நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம்.

அந்த நட்சத்திரக்காரர்களின் குணங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

சுவாதி, திருமகள் அவதரித்த நட்சத்திரம். நரசிம்மர் தோன்றிய நட்சத்திரம்.

இந்த சுவாதி குறிப்பிடும் முக்கியமான மற்றொன்று நவரத்தினங்களுள் ஒன்றான முத்து எனும் ரத்தினம்.

இந்த முத்து உருவாவது நாம் அறிந்ததே!

சிப்பிக்குள் விழும் மழைத்துளி முத்தாக மாறுகிறது.

அதுமட்டுமல்ல மணல் துகள் கூட முத்தாக மாறும். அதாவது சிப்பிக்குள் விழும் எதுவும் சிப்பியை நெருடச் செய்யும். இந்த நெருடலை சரிசெய்ய சிப்பியானது ஒருவகை திரவத்தைச் சுரந்து நெருடலைக் குறைக்கும். அந்த திரவமும் துகளும் இணைந்து முத்துவாக மாறுகிறது.

ஆம்... சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம்மை நெருடக்கூடிய தன்னை எதன் காரணம் கொண்டு உதாசீனப்படுத்தினார்களோ அதைக் கொண்டே சாதித்து வெற்றியாளராக வலம் வரக்கூடிய குணம் கொண்டவர்கள்.

சுவாதியில் சூரியன் நீசம் என பார்த்தோம். அதாவது கடும் நெருப்புப் பந்தான சூரியன் சுவாதியில் குளிர்ந்து போகிறார்.

சுவாதி நட்சத்திரமான முத்துமாலை அணிபவர்களின் உடல் உஷ்ணம் சமநிலை பெறும். அதுமட்டுமல்ல ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும்.

கடகம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களும்,  துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் முத்து மாலை அணிவது நல்ல பலனைத் தரும்.

பெண்கள் பவளம் அணிவது இன்றும் தொடர்கிறது. அதிலும் மாங்கல்யத்தில் பவளம் அணிவது சிறப்பானது. பவளம் செவ்வாயின் ரத்தினம். செவ்வாய் என்பது பெண்களின் கணவரைக் குறிக்கும். இந்த பவளத்தோடு முத்துமாலையும் சேர்த்து பெண்கள் அணிந்திருப்பதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஒரு ரகசியம் இருக்கிறது.

பவளமும் முத்தும் ஒரு சேர அணிந்த பெண்களின் கணவர்கள் தன் மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் மனைவியின் கண் பார்வைக்கே சப்தநாடியும் ஒடுங்கிப் போவார்கள்.

பொதுவாக சுவாதியில் பிறந்த ஆண்கள் மனைவியிடம் அடங்கி நடப்பவர்கள். பெண்கள் சுவாதியில் பிறந்தால் ஆண்களை அடக்கி ஆள்வார்கள்.

சுவாதியின் மற்றொரு அடையாளம் தேனீ. தேனீயின் சுறுசுறுப்பு மட்டுமல்ல, தன்னை தொடாதவரைக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கும் தேனீ. அப்படித்தான் சுவாதி நட்சத்திரக்காரர்களும்! தீண்டினால் சும்மா விடமாட்டார்கள். பகையை வேருடன் அழிப்பவர்கள். நல்லவர்கள். குணவான்கள். இரக்ககுணம் கொண்டவர்கள்.

எளிதில் ஏமாறுபவர்கள். நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள். ஆனால், நண்பர்களாலேயே துரோகத்தைச் சந்திப்பவர்கள். அப்படி துரோகம் செய்தவர்களையும் பிறகு மன்னிப்பவர்கள்.

ஆண் பெண் பாரபட்சமில்லாத நட்பு வட்டம் கொண்டவர்கள். கொஞ்சம் சபல புத்தி உடையவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்யத் தயங்காதவர்கள். சற்று சோம்பல் குணம் உள்ளவர்கள்.

இவர்களில் பெரும்பாலும் கூட்டுத்தொழில் செய்யவே ஆர்வம் காட்டுவார்கள். அரசு பணிகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

வழக்கறிஞர், நீதிபதி, சட்ட ஆலோசகர், திட்ட அலுவலர், நகர்ப்புற மேலாண்மை, மனிதவள மேலாண்மை, ஆடை ஆபரண தொழில், கலைத்துறை, ஊடகத்துறை, நடிப்பு, பாட்டு, நடனம், கேளிக்கை விடுதி. மதுபான விடுதி. அரசு விரோத தொழில், நிலக்கரி மற்றும் கனிமவளம் தொடர்பு உடைய தொழில், பெட்ரோல் நிலையம். கண்ணாடி தொழில், ஆடம்பர விளக்குகள் விற்பனை, ஓவியம், வண்ணம் பூசும் தொழில். ஆடம்பரப் பொருட்கள் விற்பனை. பெண்கள் அலங்காரப் பொருட்கள் தொழில். செயற்கை கருத்தரித்தல் மையம், ஆண்மை குறைபாடு நிவர்த்தி மருத்துவம், பாலியல் நோய் மருத்துவம் முதலான தொழில்கள் அமையும்.

இவர்கள் வணங்க வேண்டிய இறைவன் - வாயு பகவான் (குருவாயூர்), மற்றும் மருதமலை முருகன்

அதிதேவதை - நரசிம்மர்

விருட்சம் - மருத மரம்

மிருகம் - ஆண் எருமை

பறவை - தேனீ

இவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக பொருந்தும் நட்சத்திரங்கள்- மிதுனராசி, புனர்பூசம், துலாம், விசாகம், கும்பம், பூரட்டாதி - மிகச்சிறந்த வாழ்க்கை அமையும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு இருப்பார்கள். 95%

கேட்டை, ரேவதி - எல்லாவிதமான செல்வ வளத்தோடு, சீரும் சிறப்பான வாழ்க்கை அமையும். 90%

பரணி, பூரம், பூராடம் - மன நிறைவான வாழ்க்கை அமையும். கவலை என்பது துளியும் இல்லாத வாழ்க்கை அமையும். 85%

பொருந்தாத நட்சத்திரங்கள் அல்லது சேர்க்கவே கூடாத நட்சத்திரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம் - இவையெல்லாம் சுவாதி நட்சத்திரத்துக்கு ரஜ்ஜு என்னும் மாங்கல்ய பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். எனவே தவிர்க்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் இல்லாத நட்சத்திரங்களை ஜோதிடர் ஆலோசனை பெற்று அறிந்து செயல்படுங்கள். இதற்கு முன்பு உள்ள நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்த நட்சத்திரப் பட்டியல் அதிகமிருந்தது. ஆனால் இந்த சுவாதி நட்சத்திரத்திற்க்கு பட்டியல் குறைவாக இருக்கிறதே என கேட்கலாம்?

கடலில் மூழ்கி முத்து எடுப்பது என்றால் சும்மாவா? அது எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? சுவாதி என்னும் முத்து கிடைக்க புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கும். அவ்வளவு மதிப்பு வாய்ந்தது இந்த சுவாதி நட்சத்திரம்.

அடுத்த பதிவில் சுவாதி நட்சத்திரத்துக்கு, யோகம் தரும் நட்சத்திரங்கள், அதிர்ஷ்டம் தரும் நட்சத்திரங்கள், உண்மையான நண்பர்களாக எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அமைவார்கள் என்பதை விளக்கமாகவும், விரிவாகவும் பார்ப்போம். 

சுவாதி நட்சத்திரகார்களுக்கு ரோகிணி,  அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள் நண்பர்களா?

இந்தப் பதிவில் சுவாதி நட்சத்திரத்திற்கு யோகம் தரக்கூடிய நட்சத்திரங்கள் எவை எவை என்பதைப் பார்ப்போம்.

அதற்கு முன்னதாக, இன்னும் சில தகவல்களைப் பார்க்கலாம்.

இனிய நண்பர்களே!
27நட்சத்திரக்காரர்களுக்கும் ஒரேயொரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன்.

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சுவாதி நட்சத்திரக்காரர்களை எப்பாடுபட்டாவது நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் இக்கட்டான நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படியும் உங்களுக்கு உதவுவார்கள். பொதுவாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால் நட்பு வட்டம் மிகமிகப் பெரியது. இவர்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஒரு நட்பை சம்பாதித்து விடுவார்கள்.

அது டீக்கடை முதல் ஐந்து நட்சத்திர விடுதிவரை, பேருந்து முதல் விமானம் வரை எங்கும் இவர்களின் முகம் பரிச்சயமாக இருக்கும். இதனால் இவர்கள் தங்கள் நண்பர்களோடு எங்கு சென்றாலும் நட்பு வட்டம் கண்டு நண்பர்கள் வாயடைத்துப் போவார்கள். “எங்க போனாலும் உனக்கு தெரிஞ்சவன் இருக்கிறானே எப்படிடா?” என வியப்பாகவே கேட்பார்கள். அப்படி ஒரு நட்பு வட்டம் இருக்கும். ஆனால் இந்த நட்பு வட்டம் எல்லாம் பெயரளவுக்குத்தான்! பெருமை உண்டே தவிர வேறு எதற்கும் பயன் தராது.

சரி, நட்பு தான் இப்படி என்றால், நண்பர்கள்? (நண்பர்கள் - நற் பண்புகள் கொண்டவர்கள். அப்படியானால் நட்பு? கடந்து செல்வது நட்பு) நண்பர்களாக இருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள். ஆனால் செய்த உதவிக்கு மேல் அதிகம் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். இது விதிக்கப்பட்டது மாற்றவே முடியாது.

சேமிப்பு இல்லாமலேயே வாழ்பவர்கள் சுவாதிக்காரர்கள். இனிய சுவாதி நட்சத்திரக்காரர்களே... இனியாவது சேமிப்பைத் தொடங்குங்கள். இனியும் திறந்த புத்தகமாக இருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளை அறவே கைவிடுங்கள். அத்தியாவசியச் செலவுகளை மட்டுமே செய்யுங்கள்.

சரி, சுவாதிக்கு அதிக நன்மைகளை, யோகங்களை செய்யக்கூடிய நட்சத்திரங்கள் என்னென்ன, நட்சத்திரக்காரர்கள், யார் யார்?

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி ; இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் முழுமையான வெற்றியைத் தரும். அது பண விஷயமாகவும் இருக்கலாம். வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவங்களாகவும் இருக்கலாம். இந்த நட்சத்திர நண்பர்கள் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி ; இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் மிகுந்த நன்மைகளையும் லாபங்களை தரும். பயணங்கள் செய்ய, ஆடை ஆபரணங்கள் வாங்க, வங்கியில் கணக்கு துவங்க, என எதுவும் உங்களுக்கு நன்மையை வாரி வழங்கும். இந்த நட்சத்திர நண்பர்கள் பொருளாதார உதவிகள் மட்டுமல்லாமல் எல்லாவிதத்திலும் உண்மையாக இருப்பார்கள்.

பரணி - பூரம் - பூராடம் ; இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கண்ணை மூடிக்கொண்டு காரியங்களைச் செய்யலாம். வெற்றி நிச்சயம். முழுமையான வெற்றியைத் தரும். கடன் வாங்க, கடன் அடைக்க, வேலைக்கு விண்ணப்பிக்க, பணியில் சேர, பதவி உயர்வு தொடர்பாக ஆலோசனை செய்ய, நோய்கள் நீங்குவதற்காக மருந்து உண்ண, மாற்று மருத்துவத்தை முயற்சி செய்ய என அனைத்தும் சாதகமாக இருக்கும். நண்பர்களாக அமைய, ஆபத்துக் காலத்தில் சரியாக உதவி செய்வார்கள்.
வேலை முதல் தொழில் தொடர்பான உதவிகள் வரை அனைத்தையும் இந்த நட்சத்திரக்காரர்கள் செய்து கொடுப்பார்கள்.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ; இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் எல்லாவிதமான பயணங்கள், வெளிநாடு செல்வது, சுப காரியங்கள் தொடங்கவும், செய்யவும் மிகமிக ஏற்ற நட்சத்திர நாட்கள். இந்த நட்சத்திரக்காரர்கள், நண்பர்களாக அமைந்தால் அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெற்றிடலாம்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் ; இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் இரட்டிப்பு நன்மையையும் மிகப்பெரிய லாபத்தையும் கொடுக்கும். வெளிநாடு செல்லுதல், தொழில் முறை பயணங்கள் செய்வது, ஒப்பந்தங்கள் போடுதல் என எதுவும் திருப்தியான பயன்களையும் ஏராளமான பலன்களையும் தரும் என்பது உறுதி. இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் தேடிவந்து உதவிகள் செய்வார்கள். ஆபத்துக் காலங்களில் உறுதுணையாக இருப்பார்கள்.

எந்தவிதமான நன்மைகளையும் தராத,பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடிய, பயன்தராத நட்சத்திரங்கள் - நட்சத்திரக்காரர்கள் ;பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ; இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராக மாறும். சுவாதி நட்சத்திரக்கார்ர்களான உங்களுக்குப் பிரச்சினைகளையும் துயரத்தையும் தரும். எனவே, இந்த நட்சத்திர நாட்களில், முக்கியக் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் துன்பத்தைத் தவிர வேறெதுவும் உங்களுக்குக் கிடைக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

அஸ்வினி - மகம் - மூலம் ; இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த விஷயமும் பிறர்க்கு மட்டுமே நன்மை தரும்.

அதாவது உங்களால் அடுத்தவருக்கு மட்டுமே நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடைக்காது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளக்கூடாது. நண்பர்களாக அமைந்தால் உங்களை காட்டியே அவர்கள் லாபம் அடைவார்கள். உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் ; இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் நீங்கள் செய்யும் எதுவும் உங்களுக்கு எதிராக திரும்பி தீராத துயரத்தைத் தரும். நண்பர்களாக அமைந்தால், அவமானங்களையே சந்திக்க வேண்டிவரும். மிக மிக கவனமாக இருக்கக் கூடிய நட்சத்திர நாட்கள் இவை.

திருவாதிரை - சுவாதி - சதயம் ; இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் சுவாதி நட்சத்திரக்காரர்கள் மேற்கொள்ளும் எதுவும் சற்று தாமதம் தந்து பின்னரே முழு நன்மையையும் தரும். இந்த நட்சத்திரநாட்களில், ஆண்கள் மட்டும் திருமணம் செய்யக்கூடாது. நகம், தலைமுடி வெட்டக்கூடாது. மொட்டை போடக்கூடாது, காது குத்து, உபநயனம் செய்யக்கூடாது. தாம்பத்யம் கூடவே கூடாது.


காரியத்தில் கண்,  வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, ஈஸியாக ஏமாறுவார்கள்; சுவாதி நட்சத்திர கேரக்டர் இப்படித்தான்!

சுவாதி நட்சத்திரம் குறித்த தகவல்களையும் சுவாதி நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்தோம்.

இப்போது, சுவாதியின் 4 பாதங்களுக்குமான தனித்தனியாக குணநலன்களையும் பலன்களையும் பார்ப்போம்.

சுவாதி 1ம் பாதம் -

சுவாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த பக்திமான்கள். ஒழுக்கம் பிறழாதவர்கள். மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். சத்தியத்தைக் காப்பாற்றுபவர்கள். ரகசியம் காப்பவர்கள். தர்ம சிந்தனையாளர்கள். வாழ்வில் போராடி முன்னுக்கு வருபவர்கள். தந்தையின் பணத்தையோ அல்லது பூர்வீகச் சொத்தின் பின்புலத்தையோ எதிர்பார்க்காமல் தன் சுய அறிவு, மனோதிடம் மூலம் முன்னேறுபவர்கள். அதேசமயம் தன் பூர்வீகச் சொத்துக்களை வளர்ச்சியோடும் வருமானத்தோடும் பாதுகாக்கவும் தவறமாட்டார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் உத்தியோகத்தில் இருக்கவே விரும்புவார்கள். சுயதொழில் செய்வோர் குறைவுதான்.

அரசுப்பணி, ஆசிரியர், விரிவுரையாளர், திட்ட அலுவலர், கட்டிடப் பொறியாளர். மனிதவள மேம்பாடு, குழந்தைகள் பள்ளிக் கூடம் நடத்துபவர், நிதி நிர்வாகம், வங்கிப்பணி, ஆடிட்டர், பிரசங்கம், மந்திர உபதேசம், போர்ப் பயிற்சி, போர் ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி, அணு ஆயுத ஆராய்ச்சி போன்ற பணிகளில் இருப்பார்கள்.

உணவு விஷயத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். உடல் உபாதைகள் என பார்த்தால், முதுகு, பிட்டம், தொடை பகுதிகளில் பிரச்சினைகள் இருக்கும். பிறப்புறுப்பில் நோய் தொற்று, சிறுநீரில் தொற்று போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

இறைவன் - வைத்தீஸ்வரன்

விருட்சம் - மருத மரம்

வண்ணம் - மஞ்சள்

திசை - கிழக்கு

சுவாதி 2ம் பாதம் -

சுவாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் உழைப்பால் முன்னேறி தொழிலதிபர்களாக மாறக்கூடியவர்கள். எந்த வேலைக்குச் சென்றாலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறாதவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனியாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலை தருபவர்கள்.

வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச்சி அல்ல, பிரமாண்டமான வளர்ச்சி. கனவுகள் கூட பிரமாண்டம்தான். ஒரு பிரச்சினை என்றால் அந்த இடத்திலேயே தீர்வு காண்பவர்கள். நீட்டி முழக்குவது என்பதெல்லாம் கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருப்பவர்கள்.

 எங்கும் வேகம் எதிலும் வேகம். உணவைக் கூட சில நிமிடங்களில் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். ஓய்வு என்பதே இவர்களுக்குக் கிடையாது. நடுநிசியாக இருந்தாலும் வேலை என்று வந்து விட்டால் உடனே கிளம்பி விடுவார்கள். சாமக்கோழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதற்கு உதாரணம் இவர்கள்தான். இரவில் வேலை பார்ப்பதுதான் இவர்களுக்கு பிடித்தமான ஒன்று.

எதை எப்படி பணமாக்கலாம் என்பது இவர்களுக்கு கைவந்த கலை. உழைப்பு வீண் போகக் கூடாது என்பது இவர்களின் தத்துவம். ஓசி வேலை என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது,  இவர்களும் யாரிடமும் இலவச சேவையை எதிர்பார்க்க மாட்டார்கள்.

இவர்களில் அதிகம்பேர் சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

கட்டுமானத் தொழில், சாலை போடுதல், பாலங்கள் கட்டுமானம், இயந்திரங்கள் தொடர்பு உடைய தொழில். மின்சார கட்டமைப்பு, ஆடை அணிகலன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில், நிலக்கரிச் சுரங்கம், பெட்ரோகெமிக்கல், கைவினைப்பொருட்கள் தொழில், அழகுநிலையம், தோல் பொருட்கள் உற்பத்தி, அலங்காரப் பொருட்கள் விற்பனை, டைல்ஸ் மார்பிள் கிரானைட் தொழில் முதலான தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

உணவு விருப்பம் என்று பார்த்தால், எந்த உணவையும் ஒரு பிடி பிடிப்பார்கள். அசைவ உணவின் மீது விருப்பம் அதிகமிருக்கும்.

ஆரோக்கியம் என பார்த்தால் அஜீரணம், குடல்வால் பிரச்சினை, மூலம், சிறுநீர் தொற்று போன்ற பிரச்சினைகள் இருக்கும். .வயதானவர்களாக இருந்தால் தீராத மூட்டுவலி இருக்கும்.

இறைவன் - காஞ்சி ஏகாம்பரநாதர்

விருட்சம் - புளியமரம்

வண்ணம் - கருநீலம்

திசை - தென்மேற்கு

சுவாதி 3ம் பாதம் -

சுவாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்மானச் சிங்கங்கள். தன் கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள், முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள். தன் திறமை மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். சரியோ தவறோ எதுவானாலும் தன் கருத்தில் சற்றும் பின்வாங்காதவர்கள். காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரை,  ஆதாயம் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தில் இறங்குவர்கள். ஆதாயம் இல்லாவிட்டால் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். இவர்கள் வேலையில் இருந்தாலும் பகுதி நேரத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு மணி நேரத்தையும் இவர்கள் பணமாகத்தான் பார்ப்பார்கள்.

படிப்படியான வளர்ச்சி இவர்களுக்கு பிடிக்காது, மாறாக லிப்ட் (மின் தூக்கி) போல் டக்கென்று பணக்காரனாகிவிட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள். பணத்திற்காக எந்த வேலையையும் மறுக்காமல் செய்வார்கள்.

தரகு மற்றும் கமிஷன் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சினிமா தொடர்பான தொழில், மொத்த ஏஜென்ட், பைனான்ஸ், டிராவல்ஸ், கான்ட்ராக்ட் தொழில், வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்புதல், கலை தொடர்பான தொழில், அதாவது போட்டோகிராபி, ஓவியம், சுற்றுலா தொடர்பான தொழில், அரசியல்வாதி, அரசுப்பணி, இடைத்தரகர், கந்துவட்டி, தவணை திட்டம், சிட்பண்ட் தொழில் இது போன்ற தொழில்களும் வேலைகளும் அமையும்.

விதவிதமான உணவின் மீது விருப்பம் இருக்கும். வீட்டு உணவைவிட ஹோட்டல் உணவுகளில் தான் அதிக விருப்பம் இருக்கும். இதன் காரணமாகவே அஜீரணப் பிரச்சினை, அசிடிட்டி, முதுகுத் தண்டுவட பிரச்சினை போன்றவை இருக்கும்.

இறைவன் - திருநள்ளாறு தர்ப்பராண்யேஸ்வரர்

விருட்சம் - கொன்றை மரம்

வண்ணம் - இள நீலம்

திசை - மேற்கு

சுவாதி 4ம் பாதம் -

சுவாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எதையும் நம்பும் குணம் உடையவர்கள். எளிதில் ஏமாறுபவர்கள். சிறு விஷயத்திற்குக் கூட உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும் எளிதாக ஏற்றுக்கொள்பவர்கள். ஏமாற்றங்களையும் சிரித்துக்கொண்டே கடப்பவர்கள். மனக்கவலையை வெளிக்காட்டாதவர்கள்.

மனதில் பட்டதை பளிச்சென சொல்பவர்கள். தூய்மையான உடைகளை அணிபவர்கள். அதை சிறிதும் அழுக்காகாமல் பார்த்துக் கொள்வார்கள். அகத்தூய்மை புறத்தூய்மை உடையவர்கள். ஆடம்பரத்தில் நாட்டம் இருக்கும்.

செலவுகள் அதிகம் செய்பவராக இருப்பார்கள். இவர்கள் கற்ற கல்விக்கும் வேலைக்கும் சற்றும் தொடர்பே இருக்காது.

பின்னால் நடக்கப் போவதை முன்பே அறியும் ஞானம் உடையவர்கள்.

வரவுக்கு மேல் செலவு செய்பவர்கள். ஆனாலும் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆண்களாக இருந்தால் திருமணத்திற்குப் பின் முன்னேற்றம்,செல்வச் செழிப்பு என வாழ்வார்கள். பெண்களாக இருந்தால், இருக்கும் வரை பிறந்த வீடு செல்வ வளத்துடன் இருக்கும், திருமணம் நடந்து கணவர் வீட்டுக்குச் சென்ற பின் கணவர் வீடு வளமாக மாறிவிடும். பிறந்த வீடு பொருளாதார பிரச்சினைகளை சந்திக்கும்.

இவர்களில் பெரும்பாலானோர் அயல்நாடுகளில் தங்கள் திறமையால் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுபவர்களும் உண்டு.

பயணம் தொடர்பான தொழில், ஆசிரியர், வழக்கறிஞர், பேச்சை தொழிலாக செய்தல், மருத்துவம், ஜோதிடம், கடல் ஆராய்ச்சி, மீன் இறால் பண்ணை, கப்பல் பொறியாளர் மற்றும் கப்பல் தொடர்பான பணிகள் என்றிருக்கும். பெட்ரோலியம் தொடர்பான வேலை, தகவல் தொழில்நுட்பப் பணி, பத்திரிகை மற்றும் ஊடகப் பணி, உணவகம் தொடர்பான தொழில், சுப விசேஷ நிகழ்ச்சிகள், மனமகிழ் மன்றம், மது விடுதிகள் தொழில், வெளிநாட்டுப் பொருள் விற்பனை, பெண்கள் அழகு நிலையம், பெண்களுக்கான அழகு சாதனம் விற்பனை நிலையம், திருமண தகவல் மையம், தூதரகப் பணி, ரகசிய உளவுப் பணி போன்ற பணிகள் தொழில்கள் அமையும்.

இறைவன் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி

விருட்சம் - மந்தாரை மரம்

வண்ணம் - இளநீலம் மற்றும் இளம் பச்சை

திசை - வடக்கு மற்றும் வடமேற்கு

சுவாதி நட்சத்திரத்தின்
ஏ டூ இஸட் தகவல்களை கடந்த சில அத்தியாயங்களிலும் இந்த அத்தியாயத்திலும் கொடுத்திருக்கிறேன்.

நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ சுவாதி நட்சத்திரம் எனில், இவை உபயோகமானதாக இருக்கும். இல்லையெனில், உங்கள் சுவாதி நட்சத்திர நண்பர்களுக்கு இவற்றை ஷேர் செய்யுங்கள். அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


No comments:

Post a Comment