மறைந்தவரின் பன்னிரண்டாவது நாள் சபிண்டீகரணம் என்பர். அன்று அவர் ஆத்மா முன்னோர்களுடன் சேர்கிறது. அன்று நான்கு பிண்டங்கள், ஒன்று மறைந்தவர்க்கு, மற்ற மூன்று, மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு. அவ்வாறே நான்கு கலன்களில் நீர் வைக்க வேண்டும். இறந்தவர்களுக்கான பிண்டத்தை மற்ற மூன்றுடனும் மந்திரம் கூறி சேர்க்கவேண்டும். அதே போல் நீரும் ஒன்றுடன் மற்றொன்று எனக் கலக்கப்பட வேண்டும். பெண் பிண்டங்கள் கலக்கப்படும் போது மந்திரங்கள் இல்லை.
ஆண்டுதோறும் நினைவு நாளன்று சிரார்த்தம் செய்து நீத்தாருக்குப் பிண்டம் போட வேண்டும். அப்போது வருத்தமுறக்கூடாது. தற்கொலை அல்லது வேறு காரணங்களால் அகாலமரணம் நேர்ந்தால் மற்றவர்கள் தீட்டுக் காக்க வேண்டாம். உறவினர் அல்லாதார் பிணத்துடன் சுடுகாடு சென்றால் பிணத்தை எரிப்பதற்கு முன்னே நீராடலாம். சென்று திரும்பியவனும், பெண்களிடம் மகிழ்ந்து இருந்தவனும் நீராட வேண்டும். அந்தணர் பிணத்தை அவர்களே சுமந்து செல்ல வேண்டும். அனாதை அந்தணர் பிணத்தை சுடுகாட்டில் எரிக்க ஏற்பாடு செய்பவர்கள் சொர்க்கம் அடைவர்.
சிதைக்கு தீ மூட்டியதும் மறைந்தவன் உறவினர் அதனை இடம் வலமாகச் சுற்றி வர வேண்டும். உடுத்தியுள்ள உடுப்புடனே குளிக்க வேண்டும். நீத்தார் திருப்திக்காக மும்முறை நீர் ஏந்திவிட வேண்டும். வீட்டிற்குள் நுழையும் போது கால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அன்று இரவு அற்ப ஆகாரம் உண்டு. தரையில் படுத்துறங்க வேண்டும். பத்தாம் நாள் முகக்ஷவரம் செய்து கொள்ள வேண்டும்.
குறைப்பிரசவக் குழந்தை, பல் முளைக்காத குழந்தை புதைக்கப்பட வேண்டும். அதற்கு நீர்க்கடன்கள் ஏதும் இல்லை. அனாதைப் பிணத்தைத் தீண்டினால் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் தீட்டு. பிராம்மணனுக்கு மூன்று நாட்கள், க்ஷத்திரியனுக்கு நான்கு நாட்கள், வைசியனுக்கு ஐந்து நாட்கள், மற்றவர்களுக்குப் பத்து நாட்கள். திருமணமாகாத பெண் இறந்தால் அன்றிரவோடு தீட்டு விடும். மணத்துக்கு பிறகு இறந்தால் மூன்று நாட்கள். அவளுடைய திருமணமான சகோதரிக்கு இரண்டு நாட்கள்.
மணமாகாத பெண் தன் தந்தையைச் சேர்ந்தவர்களுக்கு நீர்க்கடன்கள் முடிக்க வேண்டும். மணமானவள் தன் கணவனின் பெற்றோர்க்கும், அவர்களைச் சார்ந்து பித்ருக்களுக்கும், தன் தந்தையைச் சேர்ந்தவர்களுக்கும் நீர்க்கடன் செய்ய வேண்டும். பிராமணனுக்கு பிராமண மனைவி மூலம் குழந்தை பெற்றால் பத்து நாட்கள் தீட்டு, க்ஷத்திரிய மனைவி குழந்தையானால் ஒரு நாள், வைசிய மனைவியின் குழந்தைக்கு மூன்று நாட்கள். இதர ஜாதி மனைவி மூலம் குழந்தை பிறந்தால் ஆறு நாட்கள் தீட்டு.
குழந்தை இறந்தாலும் தீட்டு அவ்வாறே. மருமகள், பெண் வயிற்றுப் பேரன், சகோதரி மகள், மைத்துனன் அவன் மகள் இறந்தால் நீராடியதும் தீட்டு விலகி விடும். தாய்வழிப் பாட்டன், பாட்டி, ஆசாரியார் ஆகியோர் இறந்தால் மூன்று நாள் தீட்டு. தற்கொலை செய்து கொள்வோர் நூறாயிரம் ஆண்டு நரகவாசம் அனுபவிக்க வேண்டும். பெற்றோர்களால் கைவிடப்பட்டவனின் பெற்றோர் இறந்தால் செய்தி கேட்டதும் நீராடினால் போதும். எனினும் ஓராண்டு முடிந்தவுடன் சிராத்த காரியங்களைச் செய்யலாம்.
இறந்தவன் தாயாதிகள் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றதால் நீராடிய பின் அக்னியைத் தொட்டும், சிறிது நெய் உட்கொண்டும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். பத்து அன்று விருந்து உட்கொள்ள வேண்டும். வறிய பிராமணன் உடலை ஒருவன் சுமந்து சென்றால் ஸம்ஸ்காரத்துக்குப் பின் குளித்தால் போகும். பிணம் எடுத்துச் செல்லப்பட்ட பின் வீட்டை கழுவுதல், சுண்ணாம்பு அடித்தல் மூலம் கிரகத் தூய்மை ஏற்படுகிறது. இறந்தவன் மகன் சிதையில் உள்ள உடலின் முகத்திலே எரிந்து கொண்டிருக்கும் சமித்துக்களால் மும்முறை மந்திரம் சொல்லித் தொட வேண்டும். மற்றவர்கள் உடல் மீது நீரைத் தெளித்து உதகக் கிரியையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பிண்டங்கள் பிராமண உயிர்க்குப் பத்தும், க்ஷத்திரியனுக்குப் பன்னிரண்டும், வைசியருக்குப் பதினைந்தும், மற்றவர்க்கு முப்பதும் போட வேண்டும். பிள்ளையில்லாவிடில் பிள்ளை வயிற்றுப் பேரன் கொள்ளி போடலாம். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்கும் போது புண்ணியாகவசனத்தின் போது பிராமணர்களுக்குப் பசு, தங்கம், ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.
ஹரியைத் தியானித்தவாறே உயிரை விட்டவன் சொர்க்கம் அடைவான். கங்கையில் எலும்பு, சாம்பல் கரைக்கப்பட்ட கணம் முதல் அவனுடைய ஆத்மா மேலுலகை நோக்கிப் பயணம் தொடங்குகிறது. தற்கொலை போன்ற அகால மரணம் அடைந்தவர்களுக்கு நாராயண பலி கொடுக்கலாம். அந்த ஆத்மா கரையேறும். மயான வைராக்கியம் அடையாதவன், தானும் இறந்து விடுவோம் என்று எண்ணாதவன் முட்டாள். மரண நேரம் எப்போது விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்போது தான் மரணம் நிகழும். மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. நாம் சட்டையை மாற்றுவதுபோல் ஆத்மா உடலை மாற்றிக் கொள்வதே மரணம். எனவே அதற்காக வருந்தக்கூடாது.
Monday, 24 May 2021
நீத்தார் கடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment