வியாசரே! முன்பொரு சமயம் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடும்போது பஞ்சப்பிரம விதானத்தைப் பற்றிச் சிவபெருமான் கூறி வந்தார். அப்போது பார்வதியார் விரும்பியபடி பிண்ட உற்பத்தி முதலிய கர்ப்ப அவஸ்தைகளை எடுத்துரைத்தார். பிறகு உமாதேவி அப்பெருமானை நோக்கி "அழியக் கூடிய மனித உடலின் முடிவு காலத்தையும் முக்தி அடையும் வழியையும் விளக்கியருள வேண்டும். காலச் சக்கரத்தைப்பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்கள் ஆயுட்கால முடிவை மனிதர்கள் முன்னரே அறிந்துணர்ந்து தங்கள் திருவடித் தாமரைக்குப் பக்தி செய்ய வேண்டுவதால் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வழியைச் சொல்லவேண்டும்" என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் கூறலானார்.
தேவி! நிலம், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் அம்சமான உடலை எடுத்த மனிதர்கள் மரணக்குறிப்பை அறிந்து புகழைச் சம்பாதிக்கும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறேன் கேள். சுந்தரியே! தேகம் எல்லாம் வெளுத்தும் காதுகள் கண்கள் மூக்கு முதலியன, ஓசை, ஒளி நாற்றங்களை அறியச் சக்தியற்றும் இருக்கும் மனிதன் ஆறு மாதத்தில் மரிப்பான். எந்தச்சப்தத்தைக் கேட்டாலும் அது மிருக சப்தத்தைப் போலக் கேட்டால் அவன் ஆறு மாதத்தில் மரணமடைவான். சூரிய சந்திரமண்டலங்கள் கருத்திருக்க கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். இடது கை ஏழுநாள் துடித்தாலும் சர்வாங்களும் துடித்து நாவு உலர்ந்தாலும் அவன் ஒரு மாதத்தில் உயிர் துறப்பான். நாவின் வழி வாதபித்த கபங்கள் ஒழுகப்பெற்றவன் ஒரு பக்ஷத்தில் மடிவான். நெஞ்சும் வாயும் உலரப் பெற்றவன். ஆறு மாதத்தில் உயிர் நீப்பான். நாத்தடித்தும் குளிர்ச்சியால் பல்லிறுகக் கட்டப் பெறுவானாயின் ஆறு மாதத்தில் இறப்பான். தண்ணீர் நெய் எண்ணெய் கண்ணாடி முதலியவற்றால் தன் தேகச்சாயையைக் காணாமல் இருந்தாலும் அவன் ஆறு மாதத்தில் இறப்பான் தன் தேகச்சாயயைக் காணாவிட்டாலும் சிரசில்லாத முண்டமாகக் காணப்படினும் ஒரு மாதத்தில் இறப்பான். இதுவரை அங்கத்தைப் பற்றிச் சொன்னேன்.
இனி வெளிக் குறியைப் பற்றி விவரிக்கிறேன்; சந்திர சூரிய மண்டலங்களைக் காந்தியின்றி ஆடையால் மூடப்பட்டதுபோல மங்கலாகக் காணும் மனிதன் பதினைந்து நாட்களில் உயிர்துறப்பான். அருந்ததியை ஆகாயத்தில் வாகனமில்லாமலும் சந்திரனிடம் களங்கமின்றியும் இரவில் நட்சத்திரங்கள் பிரகாசமின்றியும் மேகமின்றி மின்னவும் கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். திசைகளைக் கண்டு மயங்குவோன் ஆறு மாதத்தில் உயிர் துறப்பான். ஆகாயத்தில் இரவுக் காலத்தில் வானவில்லைக் கண்டவனும் பகற்காலத்தில் விண் வீழ்கொள்ளி விழக் காண்பவனும்; காகம் கழுகு முதலியன தன் தலைக்கு மேல் வட்டமிடக் கண்டவனும் ஆறு மாதத்தில் இறப்பான்.
ஆகாய வழியில் சப்தருஷி மண்டலத்தையும் சுவர்க்கமாகிய ஸ்வாதி மார்க்கத்தையும் எவன் காணவில்லையோ, அவன் ஆறு மாதத்தில் இறப்பான். பருவம், அமாவாசையின்றியே சந்திர சூரியமண்டலத்தை இராகு மறைப்பது போலக் காண்பவனும் திக்குகள் சுழலக் காண்பவனும் ஆறு மாதத்தில் அழிவான். நீல வர்ணமான ஈக்கள் சாதாரண உடம்பை மொய்க்கக்கண்டவன் ஒரு மாதத்தில் மரணமடைவான். தன் சிரசில். கழுகு, காகம், மாடப் புறா முதலியன உட்கார கண்டவன் ஒரு மாதத்தில் உயிர் நீப்பான் ஆகாயத்தில் கரிய யானை காணப்பட்டால், ஆறுமாதத்தில் மரிப்பான். நிறம் ஐந்தும் சுவை ஆறும் பிறழ்வுற்றுக் காணப்படின் ஆறு மாதத்தில் இறப்பான். நாவின்முனையும் மூக்கின் முனையும் புருவ நடுவும் காணாவிடில் மூன்று மாதத்தில் இறப்பான். சேற்றிடையில் மிதித்த பாதச்சுவடு சிதைவுற்றுத் தோன்றுமானால் மரணஞ்சமீபத்தவனாவான். நான்கு புறத்திலும் வானவில் தோன்றினாலும் பகலில் கண் எதிரில் பேயாடினாலும் ஒரு மாதத்தில் உடல் துறப்பான். பூரித்த தேகமுடையோர் இளைத்தாலும் இளைத்த தேகமுடையவர் பூரித்தாலும் ஒருமாதத்தில் உடல் நீப்பார்கள் பேய், பூதம், நரி, கழுதை, அசுரர்; கருங்காக்கை புலி, செந்நாய், பருந்து குரங்கு முதலியன தன்மேல் ஏறவும் அவை தன்னைத் தின்னவும் அவற்றைத் தான் தின்னவுமாகிய இவற்றில் ஒன்றைக் கண்டவன் பதினைந்து நாட்களில் பூவுலகிலிருந்து அகல்வான். குரங்கின் மேலேறிக் கொண்டு கீழ்த்திசை நோக்கிச் செல்வதாகக் கனவு கண்டவன் ஒருபட்ச காலத்தில் இறப்பான்.
ஒருவன் தன் மரண தினத்தை அறிந்து கொள்ள விரும்புவானாயின் தூய நீராடி, புனிதமான ஆடையணிந்து நித்திய கர்மத்தை முடித்து சுக்கில பட்சமும் அமர பட்சமும் என்று முறையே சொல்லப்படுகிற வலது கையையும் இடது கையையும் தண்ணீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைத்து, சுகந்தமான சந்தனத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு, உள்ளங்கை இரண்டினாலும் சிறிது நேரம் குழைத்து கைகூப்பிக் கும்பிட்டவனாய் உமாபதியை ஒருமித்த மனத்துடன் தியானித்து நூற்றியெட்டுதரம் தேவி மந்திரத்தை ஜபித்து, கைகளைப் பிரித்து நோக்க விரல்களின் கணுக்கள் ஒன்றில் கருமை நிறமாகக் காணப்படும், சிறு விரல் முதல் பெருவிரல் இறுதியாக கணுக்கள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாய் பதினைந்து துதிகள். ஆகையால் எந்தக் கையில் கருமை தோன்றுகிறதோ அந்தக் கைக்கு உரிய பக்ஷத்தில் அவன் இறப்பான் என்றும் கட்டை விரலின் அடிக்கணுமுதல் மேல் நோக்கிப் பிரதமையாதி திதிகளாக எண்ணிக்கொண்டு செல்கையில் எந்தத் திதியில் குறி காணப்படுகிறதோ அந்தத்திதியில் அவன் இறப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.
இனி சுவாசத்தினால் (மூச்சுக் காற்றினால்) உணரத்தக்க மரணக் குறிகளாவன; க்ஷணம், துடி, வலம் நிமிஷம், காஷ்டைகலை, முகூர்த்தம், இரவு பகல், பக்ஷம், மாதம், ருது வருஷம் யுகம் கற்பம் மகா கற்பம் என்னும் சிரமத்துடன் இம்முறையாகச் சிவ பெருமான் சங்கரித்து வருகிறார். நாசி வழியில் ஓடும் சுவாசமானது பிங்கலை வழியாக ஐந்து தினங்கள் செல்லுமாயின் மூன்று ஆண்டுகளிலும் பத்து தினங்கள் ஓடுமாயின் இரண்டு வருஷத்திலும், பதினைந்து தினங்கள் ஓடுமாயின், ஒரு வருஷத்திலும் உடல் நீப்பான் இரண்டு நாசிகளிலும் இருபது நாள் சுவாசம் ஓடுமாயின் ஆறு மாதத்திலும் இருபத்தைந்து தினங்கள் ஓடுமாயின் மூன்று மாதத்திலும் இருபத்தேழு நாட்கள் ஓடுமாயின் ஒரு மாதத்திலும் உயிர் விடுவான். வலது நாசி வழியாக ஆறு தினங்கள் சுவாசம் சென்றால் இரண்டு வருஷம் ஏழு மாதம் பதினெட்டு நாள் ஜீவிப்பான் எட்டு தினங்கள் சென்றால் இரண்டு வருஷம் நான்கு மாதம் இருபத்து நான்கு நாட்கள் வாழ்வான். ஒன்பது தினங்கள் சென்றால் ஒருவருஷம் ஏழுமாதம் பன்னிரண்டு தினங்கள் பிழைத்திருப்பான். பதினோரு தினங்கள் சென்றால், ஒன்பது மாதம், எட்டு நாட்கள் உலகில் இருப்பான் பன்னிரு தினங்கள் சென்றால், ஏழு மாதம் பன்னிரண்டு தினங்கள் பிராணனோடு இருப்பான். இருபத்து மூன்று தினங்கள் சென்றால் நான்கு மாதம் ஆறுநாட்கள் வாழ்வான். முப்பது தினங்கள் சென்றால் ஒருமாதம் பத்துநாள் ஜீவித்திருப்பான் முப்பத் தொரு நாட்கள் அப்படியே சென்றால் ஐந்து தினங்கள் பிழைத்திருப்பான். வாய்வழியே சுவாசம் செல்லுமாயின் மூன்று தினங்களில் இறுதி மூச்சை விடுவான். இது தான் காலச்சக்கிர கிரமம். இதை நான் உனக்குச் சொல்லி விட்டேன்! இவ்வாறு சிவபெருமான் பார்வதிதேவிக்குத் திருவாய் மலர்ந்தருளியபடியே ஸனத்குமார முனிவர் வியாசருக்குக் கூறினார்.
Tuesday, 25 May 2021
மனிதன் தன் மரணகாலத்தை உணரும் குறிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment