துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள்.
இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.[2][3] தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.[4] இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
இத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 1/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும்.[4] சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.
துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை, யது குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160)
பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அருச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான்.
பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
துவாரகைக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)
குருச்சேத்திரப் போரில் துவாரகையின் கிருதவர்மன், கௌரவர் அணியிலும்; சாத்தியகி பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர்.
மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார்.
1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது.[3] கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. [4]வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர் சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில் துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய அரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது.
சௌராஷ்டிர தீபகற்பத்தில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டத்தின், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது.
Monday, 24 May 2021
துவாரகாதீசர் கோயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment