Labels

Monday, 24 May 2021

சித்ரா பௌர்ணமி



சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சித்திர குப்தனுக்கு என்று ஒரு தனிக்கோயிலே இருக்கிறது.

சித்ரா பௌர்ணமி அன்று, சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சித்திர குப்தர் மற்றும் சித்திரலேகா இருவரும் வீதி உலா வருகின்றனர்.

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.  

இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.

அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.

ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார்.

அந்தச் சித்திரத்திற்கு, சிவபெருமான் உயிர் கொடுக்க வேண்டினார்.

அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார்.

இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார்.

சித்திரத்திலிருந்து சித்திர குப்தர் தோன்றிதை குறிக்கும் சித்திரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது.

வசந்த ருதுவில் நீர் நிலைகள் தெளிவாக இருக்கும்.

அந்த தெளிந்த நீரில் பௌர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் சித்ரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என மற்றொரு கதை கூறுகிறது.  

சித்ரா பௌர்ணமியின் சிறப்பு:  

சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார்.

பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார்.

ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

சித்ரா பௌர்ணமி சித்திரை மாதம் ஏற்படுகிறது. அப்போது சூரியன் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்பார்.

பௌர்ணமி விரதம் சித்ரா பௌர்ணமியன்று அதிகாலை, வீடு வாசலை மெழுகி, மாக்கோலமிட வேண்டும்.

இல்லத்தில், தெற்கு பார்த்து வாசற்கதவு அல்லது ஜன்னல் இருந்தால் திறந்து வைத்து, அந்த இடத்தை ஒட்டி, பூஜை செய்யும் இடத்தை அமைத்தல் சிறப்பு.

பூஜை செய்யும் இடத்தில், ஒரு ஆள் அமர்ந்திருப்பது போல, சித்ரகுப்தர் உருவை மாக்கோலமிட வேண்டும். அவரது திருக்கரங்களில் ஏடும் எழுத்தாணியும் இருப்பது போல் வரைய வேண்டும்.

பழங்காலத்தில், ஏட்டையும் எழுத்தாணியையும் பூஜைக்கு வைப்பார்களாம்.

சில வீடுகளில் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை, மாக்கோல மாவால் பாதங்கள் வரைவதும் வழக்கம் ஆனால், சித்ரகுப்த பூஜைக்கு, 8 வடிவம் வரைந்து அதன் மேல் விரல்கள் இருக்குமாறு வரைவார்கள்.

சித்ரகுப்தரது படம் இருப்பின் அதனையும் வைத்துப் பூஜிக்கலாம்.சௌகரியப்பட்டால், கலசம் வைத்துப் பூஜிக்கலாம்.

இல்லாவிட்டால், சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தூப தீபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டி மனமுருகி வழிபட வேண்டும்.

சித்ரகுப்தர் ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவராதலால், வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், சித்ரகுப்தருக்குப் பலவண்ண வஸ்திரம் சாற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

நிவேதனத்துக்கு, தயிர்சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவை நிவேதனம் செய்ய வேண்டும்.

பசும்பால், தயிர் முதலியவற்றை சித்ரகுப்தருக்கு நிவேதிப்பதில்லை. அன்றைய தினம் விரதமிருப்போர், உப்பு, பசும் பால், தயிர் முதலியவற்றை உட்கொள்வதுமில்லை.

சித்ரகுப்தர் புராணம் சிவபெருமான், மானிடர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியை அவருக்கு வழங்கினார்.

சித்ர குப்தரும் அவ்வாறே செய்யலானார். 'சித்' என்றால் மனம், 'குப்த' என்றால் மறைவு எனவும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவபுண்ணியங்களைக் கண்காணிப்பதாலும் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.  

புராணக்கதை:  

யமதர்மராஜர், தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார்.

அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக் கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர்.

அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன் தோன்றினார்.

காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர்.
காஞ்சியில் சித்ரகுப்தருக்கு
தனிக் கோயில்:

அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், யமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார்.

இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.

சித்ரா பெளர்ணமியில்
வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்.

குலதெய்வம்,இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு அவசியம்.

சித்ரா பெளர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் நிலவும் என்பது உறுதி. சித்ரா பவுர்ணமி அற்புதநாளில், வீட்டில் பூஜையிலும், வழிபாட்டிலும் ஈடுபடுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும்  சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அந்தநாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை.

அதேபோல், சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

|| சித்ரா பெளர்ணமி நாளில்
வீட்டில் என்ன செய்யவேண்டும் ||

‌சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள். முன்னதாக, இல்லத்தை தண்ணீர் விட்டு, நன்றாகத் தூய்மையாக்கி விடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.

உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்துக்கு உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள்.  

அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள்.

அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள் மலர்களால் அலங்கரியுங்கள்.

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியக் கடமை.

எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள்.

காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள்.

அக்கம்பக்கத்தாருக்கு  நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள்.

வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள்.

மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள்.

முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது பஜனை பாடல்கள் பாடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

பூஜை செய்த பிறகு, நிறைவாக, பயறு வகைகள் கொண்டு சுண்டல் அல்லது கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள்.

அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, ஸத்ய நாராயண பூஜை செய்து சந்திர தரிசனம் செய்யுங்கள்.

மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

இதுவரை உங்கள் வீட்டில் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அடியோடு விலகிவிடும்.

வீட்டில் அமைதி தவழும்.  
ஐஸ்வர்யமும் சுபிட்சமும் லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும்.
 
சூர்யன் நாராயணனின் அம்சமும் சந்திரன் மஹா லஷ்மியின் அம்சமும் ஆவர்.

எனவே சித்ரா பௌர்ணமி நாளில்   ஸ்ரீலஷ்மி நாராயண வழிபாடு பார்வதி பரமேஸ்வரன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

No comments:

Post a Comment